Wednesday, 19 February 2014

உயிர் தந்த தாய்.

உயிர் தந்த தாயே நீ வாழ்க!

தாயே!உன்னைத் தாயெனச்சொல்லத்
தமிழ் இனி கூசாது.
அம்மா!உன்னை அம்மாவென அழைக்க
அணி தமிழ் மறக்காது,

எட்டாவது வள்ளலாய் ஏற்றம் பெற்றாய்.நீ!
எட்டுத் திக்கிலும் உன் புகழ் எட்டுவாரில்லை.
கட்டிய சுருக்கினை வெட்டிய கருணை நீ வாழ்க!--நீ
நட்டிய நீதி நாற்புரங்களும் பரவ முதலே நீ வாழ்க!

மூவரின் உயிரை மீட்ட முத்தமிழ் அன்னையே!
ஈவரின் இது போல் எவர் செய்வர் நன்மையே !
உயிர் தந்ததால் அன்னை நீ !
உலகினில் இதுவன்றி வேறென்ன கொடை இனி.

அன்னையின் கருணை அளப்பரியது என்பர்
உண்மை விளக்கம் இன்னை புரிந்தனர்.
முன்னைத் தடயங்கள் உன்னை ஒப்பிட
என்ன தேடினும் உன்னையே காண்பர்.
வாழ்க நீ தாயே வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 February 2014

‌ஜான் பென்னி குக்

ஜான் பென்னி குக்
JHON  PENNY  CUICK
(1841-1911)
---------------------------------------------------
வரலாறு அல்ல வாழ்த்துப்பா.
---------------------------------------------------
சாரா- ஜான்பென்னி
தவ மைந்தராம்
ஆங்கில நாட்டில்
பிறந்தவராம் .
அரசு ராணுவப்
பொறியாளராம்.
அன்னவரவராம்
ஜான்பென்னியாம்.
வந்ததும் தமிழகம்
புண்ணியமாம்.
.

பொறியியல் கற்ற
பென்னியவர்
பொதுத் துறை
பொறுப்பு ஏற்றவர்.. .
தென்தமிழ் நாட்டுத்
தேனிவட்டம்
வான்மழை பொய்த்து
வறட்சிக் கண்டே
வாடி வருந்தி
மனம் நொந்தார்.

மேற்குத்தொடர்சசி
மலையிற் தோன்றி
தெற்கில் வீணாயோடி-
அரபியில் கலக்கும்--முல்லைப்
பெரியாற்றை- வடக்கிலோடும்
திசைமாற்றி- வளங்கண்டிட
வழிவகுத்து- அணைக்கட்டித்
தடுக்கும் ஆலோசனையும்-
ஆங்கில அரசின் முன்வைத்தார்.

ஏற்றது வெள்ளையர் அரசன்று
எழுபத்தைந்து இலட்சம் தந்து..
வேலையாராம்பித்த நேரத்தில்
விடா மழையும் பெய்தது.

திட்டந் தீட்டிக் கட்டிய அணை
தேடிச்சென்றது கடலுக்கே.
கட்டங்கட்டிய காசுக்கு மேலே
காலணாவும் தரவில்லையரசே.

கல்லு முள்ளு
கொல்லுஞ்சிங்கம்
பல்லி பாம்பும்
உள்ளிருக்கும் .

வெல்லும் முயற்சியோ !
வேகந்தகர்க்குமோ!
எடுத்தச் செயலதும் 
வென்றிடவேண்டும்
கெடுப்பதெதுவும்
அகன்றிட வேண்டும்
இருக்குஞ்சொத்தை
விற்றிட வேண்டும்.
முடித்திட இதற்கு
வேறென்ன வேண்டும்!.

எங்கோ பிறந்தார்க்கு
இங்கேன் அக்கறை?
அக்கரைச் சொத்து
இக்கரை. வந்தது
மனித நேயம்
மீண்டது மறுகரை.
அணையும் எழுந்தது
வளமும்  தந்தது.
வைகை பெருகி
வளர ஓடியது.
வாழ்கிறது தென்
தமிழ் நாடே இன்று!.

கரிகாலன் கட்டிய
கல்லணை வாழ்வே!
பென்னி கட்டிய
பெரியணை வாழ்வே!
சுண்ணமுங்கல்லும்
கடுக்கா பலமே!
என்னதான் அதிர்ச்சி
எதையுந் தாங்குமே!

அந்நியரொருவர்
ஆன்மாவின் இரக்கம்
இந்தியனுக்கேனோ
இல்லாதொழிந்ததோ!
தண்ணீர் வார்த்தவன்
தெய்வமாகினான்.
இன்னுமவன் பேர்
இட்டும் அழைக்கிறோம்!

மணிமண்டபம் எழுப்பிய
தமிழே வாழ்க!
நன்றியை மதித்த
அரசே வாழ்க!
மனிதமென்பது
ஒன்றினமென்றான்.
இனியன் பென்னி
புகழென்றும் வாழ்க!!


கொ.பெ.பி.அய்யா.

எழுத்தில் நான்

வாழ்க வளர்க!

எழுத்தில் நான்
வளர்கிறேனோ
இல்லையோ!
நானதிலே நலமாக
வாழ்கிறேன்..

இலக்கியம்
என்னையேற்குமோ
இல்லையோ!
நானதன் காலடியில்
கிடக்கிறேன்..

வாசகர்கள்
என்னை வாசிக்கின்றனரோ
இல்லையோ!
நானவர்களை
நேசிக்கிறேன்.

கவிஞர்கள்
என்னை வரவேற்கின்றனரோ!
இல்லையோ!
நானவர்களை
வணங்குகிறேன்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

எம்ஜியார் புகழ் வாழி!


வாலி  எம்ஜியார் புகழ் வாழி!

வாலிக்கும் மரணமோ!
காலனும் துணிவானோ!
தமிழுக்கும் சாவோ!
அமிழ்துக்கும் இறப்போ!

கங்கையும் நிற்குமோ!!
தென்றலும் அடங்குமோ!
வாலியின் வரிகளும்
காலத்தால் மறையுமோ!

எவன் சொன்னான்
இலக்கியம் செத்ததென்று!
இது ஒரு அமர ஓய்வு!
இமயத்திற்கேதடா சாவு!

எழுதியலுத்த இதயம்
இளைப்பாரட்டும்
தமிழ்ன்னை மடியில்
கமழட்டும் அவன் புகழ்!

எம்.ஜி.ஆரும் வாலியும்
இரட்டை அம்சங்கள்!1
மரணம் இவர்க்கில்லை!
வரமும் அப்படித்தான்.

காற்றுக்கு அடைவில்லை!
கவிதைக்கு முடிவில்லை!
இயற்கைக்கு இறுதியில்லை!
இறைவனுக்கும் அறுதியில்லை!

படைப்பாளிக் கேது மரணம்?
கிடைப்பான் ஒரு  தாயால்!
விடையோ களைத்த உடல்!
கொடையோ கவிதைக்கடல்!

ஆழியும் உள்ளவரை
அலையங்கு ஓயும்வரை
ஊழியே நேர்ந்தாலும்
வாலியே நின் புகழ் வாழி!

கொ.பெ.பி.அய்யா.






எழுத்தே துணை.

அறிவுக்கு மஞ்சமில்லை!

வாலிபம் தொலைந்தாலும்
வாழ்ந்தும் அலுத்தாலும்,
வயதை மதிக்கவில்லை-பாழ்
முதுமை எனக்கில்லை.

ஏதும் சேர்க்கவில்லை,
எதையும் இழக்கவில்லை,
எழுத்தன்றி வேறில்லை-ஏதும்
எனக்கென்று ஆசையில்லை.

பொருளுக்கும் ஆசையில்லை
பொய்க்கவும் தேவையில்லை.
அருளுக்குக் குறைவில்லை--எழுதும்
வரத்துக்கும் வரைவில்லை.

காவலும் எனக்கில்லை
காத்திடக் கனமில்லை.
ஏவலும் ஆருமில்லை--வீணே
எதிர்ப்பார் யாருமில்லை.

மனத்திற் கவலையில்லை
இனத்திற் பகையில்லை.
பணமும் நாடவில்லை--உதவுங்
குணமும் தேடவில்லை.

கற்றதும் நிறைவில்லை
கருத்தினில் மறைவில்லை.
படைப்புக்கு அழிவில்லை--நூல்
பதிப்பிக்க வழியில்லை.

உறவுக்குப் பஞ்சமில்லை
உதவிக்குத் தஞ்சமில்லை.
அறிவுக்குப் பஞ்சமில்லை--அதன்
ஆக்கத்தில் வஞ்சமில்லை.

விதியையும் நம்பவில்லை
நிதியையும் எம்பவில்லை
மதியன்றி வேறில்லை-நற்
கதியுண்டும் ஐயமில்லை.

கொ.பெ.பி.அய்யா.

என்னதான் பேசியிருக்கும்!

உடலும் உயிரும்

விடியலே நீ வாழ்க!இனி
வெளிச்சத்தில் உண்மையை
வெளிக்காட்டு எனச்சொல்லி
இரவு விலகியிருக்கும்.

அரும்பியதுக் காய்க்கட்டும் என
விரும்பியே செடியிடம்
விடை பெற்றிருக்கும்
உதிர்ந்த மலர்கள்.

இதற்கு மேலும் வேண்டாம்
இந்த உலகம்.
இங்கே சொர்க்கம் இல்லை.
நரகம் மட்டுமே!
இருவருமே ஒருவரை ஒருவர்
விட்டு விடுதலையாவோம்-என
உடலும் உயிரும்
ஒன்றுக்கொன்று நன்றிக் கூறி
விடுதலை பெற்றிருக்கும்.

உனைக் காய்த்தப் பாவியரிடம்
உனக்காக நானழுகிறேன்
எனக்கூறி வானிடம் கண்ணீராய்
மழைத்துளி விடை பெற்று
வானின்று இறங்கியிருக்கும்..

நட்சத்திரங்களை விரட்டி விட்டதாக
நிச்சயமில்லாக் கரைநிறை நிலா
எத்தனை சாமங்கள்தான் பாவம்!
வீண் பெருமை அடிதுக்கொண்டதோ!-என
நிலவில்லாதபோது மீன்களிடம்
வான் புறம்பேசியிருக்கும்!

எத்தனை முறை எச்சரித்தேன்
என்னை மதித்தாயா நீ?
வீணாசை விபரீத விளைவாச்சோ!-என
ஊழல் கைதியிடம் மனம்
சொல்லிக்காட்டி நொந்திருக்கும்.

இவன் உன் கட்சிக்காரன்
என்ற தகுதியைவிட இவனிடம்
வேறென்ன தகுதியுண்டோ!
சிந்திக்க விட்டனரா உன்னை?
இன்னும் அடிமைதானா நீ?
பழகிப்போன உன்னிடம்
உன்னுரிமையை நீ
சரியாகப் பயன்படுத்தெனச்
சொன்னால் கேட்கவா போகிறாய்-என
வாக்காளனிடம் வாக்குச்சீட்டு
சொல்லித்தானிருக்கும்.

பாவம் நீ!
நல்லாத்தான் எழுதியுள்ளாய்.
நானும் பெருமை அடைகிறேன்--ஆனாலும்
நீ இருக்கும் வரை என்னைத்
தேடமாட்டார்களே!-என
விரல்களிடம் எழுத்து ஆதங்கப்பட்டிருக்கும்.  . 

கொ.பெ.பி.அய்யா


குறிப்பு:
அகன் படைப்பு:-
இவை என்ன சொல்லியிருக்கும்

அதற்குச்சொன்னக் கருத்துப் பதிவு.

பாரியகன்

பெரிய மனத்தான் பாரியகன்

பெரிய மனத்தான் பாரியகன்

தேரையே  ஈந்தவன்
பாரி வள்ளல் முல்லைக்கு!
ன்னையே ஈந்தவன்
பாரியகன் தமிழுக்கு.

சொல்லுவார் சொல்லுவார்
நல்ல தமிழ் தானென்பார்.
சொல்லுவா ரெல்லோரும்
சொல்லுவா றாவதில்லை .

உள்ளமதி லுள்ளதை
உள்ளபடி செய்வதை
கொள்ளுவது கடினமே!
கொண்டவன் வள்ளலே!

ஊர் சொல்லும் புகழ்ச்சிகள்
நேர்வதவன் பொறுப்புகள்.
யார் சொல்லும் எதிர்பார்த்தும் 
தேர்வதல்ல அவன் செயல்.

பாரியகன் என்பவன்
யாரெனக் கேட்காதீர்?
நேர்மனங் கொண்டோரெல்லாம்
பாரியகன் தானென்பேன்.
                                                            
கள்ளமில்லா உள்ளங்களை
கடவுளென வாழ்த்துவோம்!.
நல்லது செய்வாரையும்
உள்ளமதில் ஏற்றுவோம்!

பெரிய மனங்கொண்டவன்
உரியதே போற்றுவான்.
பெரியமனத்தான் பாரியகன்
அரியவன் வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.





சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்.

சொல்லத் துணியாக் காதல்
வெல்லும் விதியால் சாகும்.
ஒல்லும் போதில் சொல்லும் காதல்
செல்லும் காதல் ஆகும்.

வெயில் குளியா செடிகள் 
துயில் படர்ந்து சாகும்.
 துணிய முனையுங் காதல்
இனிதே வாழல் ஆகும்.

பாடிப் பழகா குரலும் 
பாட்டொழிந்து சாகும்.
தேடி அணையும் காதல்
கூடிக்கூடல் ஆகும்.

ஊமைக் காதல் பாவம் 
ஒரு தலையாய் சாகும்.
வீரமுள்ள காதல் வென்றும்
தேரும் நிலைஆகும்!

திறந்து மூடா வீடும் தான்
கரையானால் சாகும்!
திறந்து வாய் சொன்னால் தானே
தெரியுங் காதல் ஆகும்!

முதல் முந்தும் தயக்கம்தான்
முளைக்காமலே சாகும்!
இதழ் விரித்த காதல்தானே
இனிக்கும் கனி ஆகும்!

பருவம் விதையா விதையுந்தானே
அருவி அதுவே சாகும்.
தருணம் ஆய்ந்து கதைக்கும் காதல்
திருமணமே ஆகும்.

கொ.பெ.பி,அய்யா.

பாவம் செய்த தமிழர் நாம்.

பாவவம் செய்துவிட்டோம்.


அரசு இயல் தூயனை,
ஆக்கம் செய் நேயனை,
இல்லறம் துறந்தானை,
ஈடில்லா அறத்தானை,
உண்மையை வாழ்ந்தானை,
ஊழலை வென்றானை,
எளிமையே ஆண்டானை,
ஏழ்மையே கொண்டானை,
ஐயம் தெளிந்தானை,
ஒழுக்கம் கண்டானை,
ஓர் உயிர்த் தானானை
ஔவியம் அறியானை,
அஃறினையும் புரிந்தானை,

அரசியல் எனச்சாய்ந்து
அய்யகோ தோற்கடித்தோம்
அதுபாவம் அறியாதும்
அநியாயம் செய்துவிட்டோம்.

பாவம் செய்த பாவியர்க்கு
இலாபம் தானென்ன வரும்?
கோவம் கொண்ட தர்மத்திடம்
சாபம்தான் வாங்கிக் கொண்டோம்.

சனநாயகம் தோற்கடித்து
சரித்திரம் இழிவானோம்.
பணனாயக அரசியலில்
நிரந்தரமாய்க் கைதியானோம்.

பொதுநலம் எனமயக்கும்
சுயநல அரசியலை
புரிவதும் எந்நாளோ!
கரையேற லெப்போதோ!

ஒப்பில்லா அவர்நாமம்
தப்பிடச் செப்புவர்.
ஒப்பிட எவருந்தான்
இப்புவியில் பிறப்பரோ!

பாவத்தின் தண்டனையை
சாபத்தின் முன்வினையை
மீண்டும் ஒரு காமராசர்
ஆண்டுதான் தீரப்பாரோ!

கொ.பெ.பி.அய்யா.


!

தமிழகம் தலை நமிர்ந்தது.

தமிழகம் தலை நமிர்ந்தது.

தமிழக  அரசே-நின்
தன்னிகரில்லா தன்மானம்
வென்றது.இனி
காவிரித்தாய் கரை
நிறப்பி வருவாள்.

அரசிதழ் வெளியீடு
அபாரச் சாதனை.
காவிரி மேலாண்மை
தேவைக்குத் தீர்வு
செய்யும்.-பெரும்
முயற்சிகளே
திருவினையாச்சு.

நஞ்சை நனையட்டும்.
நாடு செழிக்கட்டும்.
தஞ்சைச் சேறானால்தான்
தமிழுக்குச் சோறுண்டு.

வேளாண்மை வாழட்டும்.
விலைவாசி குறையட்டும்.
தமிழகமேஇன்று நீ
தலை நிமிர்ந்தாய்.

அம்மா என்றால் சும்மாவா!
அசத்தி விட்டாரம்மா.
பிறந்த நாள் பரிசாக
பின்னி விட்டாயம்மா.
வாழ்க நீ பல்லாண்டு.        


கொ.பெ.பிச்சையா.

நானும் வள்ளலே!

நானுங்கூடப்பாரிதான்!!

பாடிப்பாடிப் பழகினேன்
பாடாதிருக்க முடியலே!..
தேடித்தேடிக் கண்டதை
மூடிமறைக்கத் தெரியலே!

வாரி வாரி வழங்குறேன்,
வள்ளலாக இருக்கிறேன்.
பேனாவைத்தான் திறக்கிறேன்
நானா எடுத்துக் கொடுக்குறேன்.

காலணாவும் சம்பாதிக்க
வேலை இல்லையோ!
கண்டபடி பேசுறாளே
மனைவி வீட்டிலே!

தேரையே தந்தானே
பாரி வள்ளல் முல்லைக்கு!
என்னையே தந்தேனே
நானுந்தானே தமிழுக்கு!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.




முதல் வணக்கம்.

முதல் வணக்கம்!!

இது என் முதல் வணக்கம்.
இனியும் தொடர் வணக்கம்.
வணக்கமே அறிமுகம்.
வளர்ச்சிக்கு விண்ணப்பம்.

அன்னைக்கும் மண்ணுக்கும்
அழுகையே முதல் வணக்கம்
எந்தைக்கும் முந்தைக்கும்
முந்தும் முதல் வணக்கம்.

பேசிய முதல் பேச்சாம்
தேசிய சொல்லாச்சாம்.
அம்மாணு தமிழ் வணக்கம்.
அகரத்தில் முதல் வணக்கம்.

 எனத் தொடங்கும் போது
ஆசிரியர்கு முதல் வணக்கம்.
 எனத் தொடரும் போது
இறைவனுக்கு முதல் வணக்கம்.

எழுதவும் பழகவும் எழுத்தாம்
இலக்கியப் பள்ளி வந்தேன்.
இக்கவி முதல் வணக்கம்.
ஏற்று எம்மை வளர்த்திடுவீர்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.




மகளீர் தினம்.

மகளீர் தினம்.

மாதராய்ப் பிறப் பதற்கோ
மாதவம் செய்ய வேணும்.
ஏங்கிய கவிஞர் அவர்
மங்கையாகப் பிறப்பாரோ!
மகளீர் படுந் துயரங்களை
மனந் தாங்கிக் கொள்வரோ!

மகளீர் தின நாளின்று
மகளீர்க்கோ மகிழ்ச்சி யில்லை
மகளீரும் மனித ரென்றே
மதிக்க இங்கே மனிதரில்லை.
மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடவேணும்.

ஆசைப் பொருளோ பெண்?.
அலையும்  வேசைப் பயல்களே!
மானுடமே தலை குனிந்து
மனம் நொந்து துடிக்கிறதே!
வெறி நாய்கள் ஒழிக்கவே
வேலு நாச்சி எழுவாளோ!!

கொ.பெ.பி.அய்யா.




பொய்யான உலகம்

பொய்யான உலகம்

உணர்வுகளை உசுப்பிவிட
கனவினை அழைக்கிறேன்.
கனவுகளை எழுப்பிவிட
நினைவினை வேண்டுகிறேன்.

நினைவுகளை மலரவிட
மனதினைக் கேட்கிறேன்.
மனதினைத் தூங்கவிட
மனிதனைக் கெஞ்சிறேன்.

பொய்யான உலகமிதில்
புகழுக்கு ஏங்குகிறார்.
மெய்யென்றால் என்னவென
பொய்யாரைக் கேட்கிறார்.

வைத்திருந்தால் சொத்துபத்து
வரலாறும் படைக்கலாம்.
கையாளன் கிறுக்கினாலும்
காவியங்கள் ஆகலாம்.

கொ.பெ.பி.அய்யா.








கவி பழகு கண்மணி.

கவி பழகு கண்மணி.

கவி பழகு கண்மணி
கவி பழகு!
புவி அழகுப் பூவே!
கவி பழகு!

பாரதி கற்றுத் தந்த,
பழகு தமிழ் புதுக்கவிதை,
கூறும் மொழி வழியிலே
கூசாது கவி பழகு!

சேதியைச் சிங்காரித்து
சிறு வரிகள் செய்குவாய்.
ஆதியை அஞ்சாது
அறிந்த நடை பழகுவாய்.

புத்தம் புது மொட்டு நீ!
சந்தம் அது மெட்டிலே,
வித்தைப் புது கவி பாட
தத்தித் தத்திப் பழகிடலாம்.

நினைத்தைச் சொல்லலாம்.
நேர்த்தியாய் பாடலாம்.
பொருத்துவதும் புனைவதும்
விருத்தியாகும் பழக்கதில்.

இசையுஞ் சொல் இசைந்திடும்.
இசைச்சேர கவி யினிக்கும்.
இரசனைக்குச் சொல் 
தேடும்
வசமாகும் கவி யோகம்.

சொல்லாளும் திறன் தேர்ந்து
சொல்லும் பொருள் 
நயம் சேர்ந்து
அலங்கார லயம் கோர்த்து
ஆக்குவாய் கவி மாலை!

அவசரங்கள் ஆகாது
ஆழம் கணடு தேடணும்.
தவம் பெறும் ஞானமாம்
கவிதயது பழகலாம்.

படைத்ததைச் சொல்லுமுன்,
பலமுறை சரி ஆய்ந்து,
விடை பகர வினாக் கண்டும்
விளங்கும் கவி பழகுவாய்!

முக்காலக் கவிஞர்களின்
சொக்குங் கவிச் சுந்தரம்.
கற்கண்டாய் சுவைத்துக்கொண்டு
கவி வரையப் பழகுவாய்!

கொ.பெ.பி.அய்யா.








பாரதமே சொர்கம்.

பாரதமே சொர்க்கம்!!

முந்திய நாகரிகம் உயர்
மூத்த குடிமக்கள்.
விந்திய மலை முட்ட
வேண்டிய செல்வங்கள்.
இந்தியத் திரு நாட்டின்
இருப்பென் றெண்ணியே
வந்த முதலை யெல்லாம்
வாரிச் சென்றதோ!

பொறுமைப் பூமி இதே!
பொக்கிசக் களஞ்சியமே!
வறுமைப்பட்டு பின்
வாடி நின்றதே!
பெருமைக் குலைந்து தன்
பிள்ளைப்பசி போக்கவும்
திருமை நாடுகள் முன்
நாடியும் நின்றதோ!

அடிமை செய்தவன் தளை
அறுத்து ஏகினாலும்.
விடிவு வருமென இமை
விழிக்கும் வேளையில்
தடித்த மனத்தினர் தலை
தூக்கிச் சிரித்தனர்..
பிடித்து வளைத்துக் கொள்ளை
அடித்துக் கொடுத்தனர்.

குடும்பம் குடும்பமாய்
கொத்தடிமைக் கோலம்.
கொஞ்சங் கொஞ்சமாய்
குறைந்திட்ட போதும்
பிஞ்சு இளசுகள் கஞ்சிக்காக
நஞ்சுக் கொடியோரின்
வஞ்சக ஏவலில் நைந்து
வாடுவதோ பாவம்.!.

ஒட்ட ஓர் இடமில்லை.
  ஓரம் தேடி உறங்குது.
கட்டில் தேடும் இளசுகளோ
 காடுகளிலில் மறையுது.
தொட்டில் ஆடுங் குழந்தைகளோ
 தொட்டி களில் கதறுது.
மொட்டில் வாடும் பிஞ்சுகளோ
 தட்டில் பிச்சை கேட்குது.

வயிற் றிற்கு சோறில்லை
வழிப் பறிகள் செய்யுது.
பத்து மாதம் சுமந்துபெற்ற
பால கரை விற்குது.
வேலை யேதும் இல்லாமல்
வீதிகளில் நிற்குது.
வறுமை செய்யும் கொடுமையில்
வழிதவறிச் செல்லுது.

இந்த நிலைமாற அரசு,
ஏற்றிடும் திட்டமெல்லாம்,
வந்திடும் வழிகளிலேயே
சந்துகளில் ஒளிகிறது..
எந்த நிலையிலும் இங்கே
எவருமே சரியில்லை.
சொந்தமாகுமோ அந்தச்
சுடு காடும் பாவியர்க்கும்!

என்னதான் செய்யலாம்
ஏதாவது சொல்லுங்கள்.
பாவம் இந்த ஏழைகள்
பசி தணிக்க உதவுங்கள்.
ஊழல் செய்யும் கோழைகளை
உணர வழிச் செய்யுங்கள்.
பாழ் படுத்தும் பாவியரை
நாள் கொடுத்துத் தூக்குங்கள்.

ஆள் எண்ணித் தேடுவீர்!
அடிமைத்தனம் நீக்குவீர்!
தனி நிலைப் பொருளாதாரம்
நனி நிலை தேக்குவீர்!
இல்லாரே இல்லாமை
வல்லரசு ஆக்குவீர்!
நல்லாண்மை கொண்டுமே
வல்லாண்மை நிலை செய்வீர்!

புதியதாய் விடியல் நோக்கி
புதுமைகள் தேடுவோம்.
நதிகளும் கடல் மறக்க
நல்லணைகள் கட்டுவோம்,
பசுமையின் வண்ண மெங்கும்
பாரெங்கும் பரப்புவோம்.
பசியே மறந்தோ மென
பாரதமே சொர்க்க மென்போம்.

கொ.பெ.பி.அய்யா.










அம்மாதான் எல்லாம்.

அவளே எல்லாம்!

அவளே சொல்லாம்
அவளே மொழியாம்
அவளே அன்பாம்
அவளே எல்லாம்.

அவள்தான் அம்மா.
அவள்தான் ஆரம்பம்.
அவளின் உயிராம்.
அவள் கொடை வாழ்வாம்.

அவள் தந்த உதிரம்
அவள் அதன் ஓட்டம்
அவள் வடித்த உடலாம்
அவள் அளித்த கடனாம்.

அவள் கொடுத்த உண்ணீர்.
அவள் நினைவுக் கண்ணீர்.
அவள் பாடிய தாலாட்டு
அவள் துதிப் பாராட்டு.

அவள் விரித்த மடிப்பு
அவள் கனவின் விரிப்பு.
அவள் அணைத்த பாசம்
அவள் வம்சம் பேசும்.

அவள் பதித்த முத்தம்
அவள் அடைந்த இன்பம்.
அவள் கொண்ட சித்தம்
அவள் அருள் செல்வம்.

கொ.பெ.பி.அய்யா.






Monday, 17 February 2014

உழவன் பாடு.

உழுதவன் பாடு.

அந்த நாளை நினைக்
கிறேன்.
இந்த நாளை வியக்கிறேன்.
சென்ற நாளைப் படிக்
கிறேன்.
வந்த நாளைப் புரிகிறேன்

ஒருவர் ஊருக்கு முதலாளி--அந்த ஒருவர் வாழ்வே 
தொழிலாளி.
உழைப்பைச் சுரண்டியப் பெரிச்சாளி,
ஒழிநததால் உயர்ந்தான் பாட்டாளி.

நாளும் உழைப்பான் உழைப்பாளி.
நாழித் தானியக் கூலிக்கு.
காரி உமிழ்வான் முதலாளி 
காய்ப்பு இல்லாக் கைகளில்.

கோவணம் உழவன் சீருடை-
குடிசை அவனது மாளிகை.
வெயிலும் காற்றும் உறவாகும்
வேர்வைக் குளியல் தினமாகும்.

சோற்றுக்கு அழுவான் பிள்ளை.
மாற்றுத் துணிக்கு 
மனைவி ஒளிவாள் 
அழுகை அதுவே மொழியாச்சு
உழுதவன் பாடே இதுவாச்சு.

உழைப்பை உறிஞ்சி உண்டவன்,
பிழைப்பைத் தேடி ஓடுகிறான்.
காலச் சக்கரம் உருண்டு பழைமை
காடசியும் மாறிப் புரண்டது.

கொ,பெ.பி.அய்யா.






எமஜியார் மந்திரம்

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தார் எனுமொரு நிரந்தரம்.
கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
கூடி வாழ்ந்த அதிசயம்.

வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
வாழ்ந்த வரையும் சிங்கம்.
இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
என்றும் பிறப்பார் இல்லை.

கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—அவன்
கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய்.

மரணம் என்பது உனக்கில்லை—இந்த
மண்ணும் மரணம் ஆவதில்லை.
இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.

இருந்த போது இழித்தோரும்—உயிர்
துறந்த போது பாடினர்.
இன்றும் உன் முகம் காட்டாமல்—இங்கு
எவரும் துணிவரோ!ஓட்டுத்தான்.

மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
மறைத்திட எது எழும் இமயமே!
நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
திரைகளால் பாடி வங்கமே!

கொ.பெ.பி.அய்யா.  

 .




முயற்சியே பயிற்சிகள்.

முயற்சிகளே பயிற்சிகள் !

இறைவனொருவன் இருக்கிறான்,
எல்லாமவனே பார்க்கிறான்,
என்றே வீணே  இருந்திட்டால்;
எந்தப் பருப்பும் வேகாதே.

உணவைக்கூட  ஊட்டிவிட
ஒருவரைத்தேட முயலணும்.
கனவைக்கூட காண்பதற்கும்
கண்ணுறங்க  முயன்றிடணும்.

செத்துக்கிடந்த எலியையும்
சில்லறையாக்கிய கதையுண்டு=
சில்லறைக் காசுகள் கட்டாகும்
கட்டுயர்ந்தால்  கனவான்  நீ..!

செத்த எலியையும் விடவில்லை
விற்றா னொருவன் தெருவிலே
பூனைக்காரன் வாங்கினான்.
விற்ற காசினை லாபகமாய் வீண்செய்யாமல் பத்திரமாய்
மீண்டும் மீண்டும் வைக்கோலே
வாங்கி வாங்கி விற்று  விற்று  வியாபாரியே பணக்காரன்.
வளர்ந்து வளர்ந்து முதலாளி அதிபரானான் பேராளி.
முயற்சிகள்தானே பயிற்சிகளாகும்.
பயிற்சிகள்தானே திருவினையாகும்..

கொ.பெ.பி அய்யா.

முக்காலக் கவிஞன்.

முக்காலக் கவிஞன்.

பாரதிதான் யாரம்மா?
பாப்பா உனக்குத் தெரியுமா?
பாப்பா பாட்டுப் பாடிய
பாரதியார் தானம்மா..

ஓடி ஆடச் சொன்னவர்.
ஓயக் கூடாதென்றவர்.
காலை படிக்கச் சொன்னவர்.
கடியக் கூடாதென்றவர்

தலைப்பாக் கட்டு கவிஞராம்.
தடித்த மீசைக்காரராம்.,
தமிழோடு பிறமொழிகள்
திறனும் பெறச் சொன்னாராம்.

கருப்புப் பொட்டு இட்டவர்,
கருப்புக் கோட்டும் அணிந்தவர்
காளியைத்தான் வேண்டுவார்
கவிகள் பாடித் தூண்டுவார்..

கூடிப் பழகப் பாடினார்.
பாடி மகிழக் கூறினார்.
தேடித் தேடி தமிழனை
தேச உணர்வை ஊட்டினார்

புதுமைக் கவி புரட்சியர்
புதுக்கவிதை துணிந்தவர்.
வசனக் கவி செய்தவர்
வளர்ந்திட வளர்த்தவர்.

நதிகளெல்லாம் இணைந்திட
நாடு வளம் செழித்திட
சேது வழி செய்திட
சிறக்க நலம் சொன்னவர்.

ஈழமதைத் தமிழோடு
இணையப் பாலம் கேட்டவர்.
வாழுந்தமிழ் உலகினை
வரையத்திட்டம் போட்டவர்.

உலகக் கவி கீட்சையும்
உயரம் தாண்டி நின்றவர்.
திலகமான திராவிடம்
உலக மூலம் என்றவர்.

மொழிகள் பல கற்றவர்,
மொழி பெயர்ப்புச் செய்தவர்.
மொழிகளெல்லாம் பழகியே
வழி சொன்னார் வளரவே!

சிட்டுகளின் நண்பரவர்
பட்டுவிடக் கூடாதென்றார்.
கெட்டழியும் சூழலை
தொட்டு அன்றே காட்டினார்.

பத்திரிக்கைகள் நடத்தினார்.
எத்திசையும் பரவினார்.
வெள்ளையனின் கண்ணிலே
விரலை விட்டு ஆட்டினார்.

எட்டையபுரம் பிறந்தவர்
இந்தியாவில் வாழ்ந்தவர்.
சாட்டையாகி சமூகத்தின்
சடங்குமுறை ஒழித்தவர்..

சாதிமதக் கொடுமைகளை
நீதி கூறி ஓட்டினார்.
வேதங்களும் பேசுவதை
விளங்கவே எடுத்திடித்தார்.

காதல் செய் என்றவர்
கட்டுடல் கொண்டவர்
எமனையும் காலாலே
எட்டியே உதைத்தவர்.

முக்காலக் கவிஞர் இவர்
எக்காலமும் வாழுவார்.
இக்காலக் கவிஞருக்கும்
தக்கோலம் தந்தருள்வார்.

கொ.பெ.பி.அய்யா..      












தமிழகம் தலை நிமிர்ந்தது.

தமிழகம் தலை நமிர்ந்தது.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

தமிழக  அரசே-நின்
தன்னிகரில்லா தன்மானம்
வென்றது.இனி
காவிரித்தாய் கரை
நிறப்பி வருவாள்.
அரசிதழ் வெளியீடு
அபாரச் சாதனை.
காவிரி மேலாண்மை
தேவைக்குத் தீர்வு
செய்யும்.-பெரும்
முயற்சிகளே
திருவினையாச்சு.
நஞ்சை நனையட்டும்.
நாடு செழிக்கட்டும்.
தஞ்சை சேறானால்தான்
தமிழுக்குச் சோறுண்டு.
வேளாண்மை வாழட்டும்.
விலைவாசி குறையட்டும்.
தமிழகமேஇன்று நீ
தலை நிமிர்ந்தாய்.
அம்மா என்றால் சும்மாவா!
அசத்தி விட்டாயம்மா.
பிறந்த நாள் பரிசாக
பின்னி விட்டாயம்மா.
வாழ்க நீ பல்லாண்டு.        




தமிழக வாழ்த்து.

தமிழ் நாடு வாழ்த்து.

முருகேயருளே திருவே வாழ்க!
தமிழே!எமையாள் தாயே வாழ்க!

பல்லவ கொங்கு பாண்டியம்நாஞ்சில்
வல்லவ சேது ஈழம் சோழம்
எல்லாம் உனதே இலக்கிய முதலே
வெல்லுந் தமிழே வாழ்க!

காவேரி பொன்னி பாலாறு பெண்ணை
தாமிரபரணி வைகை 
நதிகள்
பூமூன்று விளையும் பொங்கிடக்கருணை
நீ தந்தருளும் வளமே வாழ்க

வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும் 
ரணஅலைகள்
தங்காத்தேடும் தமிழே வாழ்க!

மேற்கும் கிழக்கும் மலைத்தொடர் கூட்டம்
ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம்.
பார்ககும் உலகின் பரவச ஆட்டம்
ஏற்கும் வல்ல தமிழே வாழ்க!

தாயே தமிழே தயாளு நீயே!
சேயே எம்மைக் காப்பதும் 
நீயே!
அன்னை உன்னை அல்லது யாரே!
அருள்வாயம்மா ஆகட்டும் ஜெயமே!

கொ.பெ.பி.அய்யா.







இதுதான் அரசியலா!

இதுதான் அரசியலா?

மக்களுக்கே உழைத்திட்ட
மாமனிதர் போற்றிட்ட
மறுவில்லா அரசியல்--இன்று
மறைந்த ஓர் அறவியல்.

காமராசர் காந்தியவர்
களமமைத்த அரசியல்.
சீமான்களின் கைகளில்--அய்யோ
சிக்குண்ட சிறைக்கிளிகள்.!

விடுதலை விளைத்திட
விதையான உயிர்களே
வீறுகொண்டு எழுந்தாலும்--மீண்டும்
விளையுமோ விடுதலை!

தண்ணீரும் தரமறுக்கும்
தரங்கெட்ட அரசியலாம்.
அந்நியரும் செய்யாதாம்--சிறுமை
இந்தியரின் சாதனையாம்!

ஒன்றுபட்ட சமுதாயம்
உருவாக்கும் உழைப்பெல்லாம்
விழலுக்கு நீராத்தான்---அந்தோ
வீணாத்தான் போனதோ!

அப்பாவியத் தொண்டனாக்கி
அடியாளாய் உருமாற்றி
மப்பிலே சூடேற்றி--காய்வர்
"தீ"வினை அரங்கேற்றி.

இரவிலே விடுதலையோ!
இன்னமும் விடியலையோ!
உறவிலே இந்தியரோ---ஏனோ
உணர்விலே அந்நியரோ!

வாரிசு ஆட்சி முறை
வழக் கொழிந்த கறை.
மாறாகிக் கட்சித் தலை--தோதெனப்
புறவாசல் நுழை கலை.

எட்டும் வரை நாட்டையே!
சுட்டும் மறைக் கொள்ளையே!
மக்களால் மக்களுக்கு--ஆளும்
மக்கள் ஆட்சி இல்லையே!

வெக்கங்கெட்ட அரசியல்
நக்கி வாழும் விரசியல்
மக்களே பாவிகள் ---பாவம்
சொக்கினர் பசப்பியல்.

மேடை மொழிப் பேச்செலாம்
மாடுபிடிக் கூச்சலாம்.
ஆடைதானே  வெள்ளையாம்--அவர்
வாடையே கொள்ளையாம்.

ஏமாறுந் தொண்டனோ
இழக்கின்றான் சுதந்திரம்..
சோமாறுந் தலைவனோ--ஏய்த்துக்
கொழுக்கின்றான் தினந்தினம்.
அவனை விட்டால் இவனா?
இவனை விட்டால் அவனா?
எவனவன் இராமனா--அறியத்
தவறுதல் நாசமே!

கொ.பெ.பி.அய்யா..







palani

சமூக ஆர்வலர்

ஐம்பத்தாறின் அகவை எட்டிடும்
பைந்தமிழ்ப் பாசமே!--உன்
கைந்தெழுக் கவிதைகள் சொல்லிடும்
பைம்பொழில் வாசமே!

நைந்திடும் சமூகம் உய்ந்திடவே
தையலனே ஆர்வலனே!-மண்
தொய்ந்திடும் மனிதம் எழுந்திடவே
செய்யுளனே சேவகனே!

காமராசன் போலும் நீயே
காமம் துறந்தாயே!--தன்
காதல் எல்லாம் இயற்கை மீதே
கவனம் கொண்டாயே!

நாத்திகரான ஆத்திகர் தானோ!
இயற்கைத் தொழுவாரோ!--மன்
அழகைப் போற்றும் தமரன்
ஆனாய் நீ வாழி!

நட்பின் நட்பே மென்மையாணாம்
கற்பின் பண்பாணாம் -மாண்
விற்பன்னச்சிற்பி அறனே வரமே!
அற்புத அறிவே வாழியே!

உயிர்கள் எல்லாம் உன்னுறவாக
உள்ளங் களித்தாயே!-விண்
வெளிகள்கூட தெளிவாகவே
விளங்க விழைந்தாயே!

வளமே நலமே வையம் வாழ
வாழ்ந்தும் சொல்வாயே!-கண்
கருத்தே பொருத்தும் கவியே வாழ்க
கனவும் நினைவாக!

பிறரின் நலமே பேரின்பமென்பார்
பேணும் மனிதமே!--நன்
துறவி காண் வாழ்வே மெய்யே!
தொடர்பவர் வாழ்கவே!

இன்னும் நூறு ஆண்டும் மேலே
இருந்தும் சொல்வாயே!-சன்
னன்பாளும் வாழும் பழனிக்
குமாரே வாழியே


கொ.பெ.பி.அய்யா.

இனிக்கும் இரவு.

இரவே இனிமை

இரவே இனிமை.
தனிமைக்கு உரிமை.
அமைதியின் சுகபோகம்
இரவில்தான் பிரவேசம்.
ஆன்மாவின் உறவு
இரவில்தான் வரவு.
உழைத்தவன் ஓய்வு
இரவில்தான் தீர்வு.
சம்சாரி இராஜ்யம்
இரவில்தான் பூஜ்யம்.
நினைவுகள் மறக்கும்
இரவுகள் இனிக்கும்.

தொலைந்த நாகரீகம்
கலைந்த பண்பாடு
சிதைந்த பழைமை
புதைந்த வழமை
மறைந்த அருமை
நிறைந்த வறுமை
இதுதான் நிலைமை
இன்றைய புதுமை.



எது உண்மை?

எதுதான் உண்மை?

நிலவும் சூரியனும்
நிலவும் பொழுதே
நிலவும் ஒளியென்றால்
நிலவும் இருளே
நிலையாமோ!

மேகம் கூடியும்
மேலே மூடியும்
கூடும் கருப்பும்
கூறும் நிசமும்
இருளே நிரந்தரமோ!

இருளோ!ஒளியோ!
எதுதான் நிலையோ!
இருளில் ஒளிந்த
பகலோ!இல்லை
பகலுக்குள் இரவோ!

பகலவன் விழுந்திட
பகல் ஒளிகிறது.
பகலவன் எழுந்திட
இரவு விடிகிறது.
சூரியன் விளையாடுகிறது.

வெண்மை கருக்கும்
கருமை நிறைக்கும்.
வெண்மை நிலைக்காது
கருமை வெளுக்காது
உண்மையும் பொய்க்காது.

சந்தியாப் பொழுது.
சந்திக்கும் பொழுது
மாயை மயங்கி
நியாயம் விளங்க
வானம் சிவக்கிறது.

சிவந்து கருத்து
கருத்து வெளுத்து
வெளுத்துக் கருத்து
விடியல் வளர
எத்தனை எத்தனை தடுப்பு!

எதுதான் உண்மை
இரவா பகலா?
எதுதான் நிலைமை
இருளா ஒளியா?
இயற்கை சொல்லட்டும்!

கொ.பெ.பி.அய்யா.