இதுதான் அரசியலா?
மக்களுக்கே உழைத்திட்ட
மாமனிதர் போற்றிட்ட
மறுவில்லா அரசியல்--இன்று
மறைந்த ஓர் அறவியல்.
காமராசர் காந்தியவர்
களமமைத்த அரசியல்.
சீமான்களின் கைகளில்--அய்யோ
சிக்குண்ட சிறைக்கிளிகள்.!
விடுதலை விளைத்திட
விதையான உயிர்களே
வீறுகொண்டு எழுந்தாலும்--மீண்டும்
விளையுமோ விடுதலை!
தண்ணீரும் தரமறுக்கும்
தரங்கெட்ட அரசியலாம்.
அந்நியரும் செய்யாதாம்--சிறுமை
இந்தியரின் சாதனையாம்!
ஒன்றுபட்ட சமுதாயம்
உருவாக்கும் உழைப்பெல்லாம்
விழலுக்கு நீராத்தான்---அந்தோ
வீணாத்தான் போனதோ!
அப்பாவியத் தொண்டனாக்கி
அடியாளாய் உருமாற்றி
மப்பிலே சூடேற்றி--காய்வர்
"தீ"வினை அரங்கேற்றி.
இரவிலே விடுதலையோ!
இன்னமும் விடியலையோ!
உறவிலே இந்தியரோ---ஏனோ
உணர்விலே அந்நியரோ!
வாரிசு ஆட்சி முறை
வழக் கொழிந்த கறை.
மாறாகிக் கட்சித் தலை--தோதெனப்
புறவாசல் நுழை கலை.
எட்டும் வரை நாட்டையே!
சுட்டும் மறைக் கொள்ளையே!
மக்களால் மக்களுக்கு--ஆளும்
மக்கள் ஆட்சி இல்லையே!
வெக்கங்கெட்ட அரசியல்
நக்கி வாழும் விரசியல்
மக்களே பாவிகள் ---பாவம்
சொக்கினர் பசப்பியல்.
மேடை மொழிப் பேச்செலாம்
மாடுபிடிக் கூச்சலாம்.
ஆடைதானே வெள்ளையாம்--அவர்
வாடையே கொள்ளையாம்.
ஏமாறுந் தொண்டனோ
இழக்கின்றான் சுதந்திரம்..
சோமாறுந் தலைவனோ--ஏய்த்துக்
கொழுக்கின்றான் தினந்தினம்.
அவனை விட்டால் இவனா?
இவனை விட்டால் அவனா?
எவனவன் இராமனா--அறியத்
தவறுதல் நாசமே!
கொ.பெ.பி.அய்யா..
No comments:
Post a Comment